தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், காதலன் தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்ற ஆத்திரத்தில் அழகுக்கலை நிபுணர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தை சேர்ந்த கிரண்மயி (வயது 28-30 என இருக்கலாம்) என்ற இளம்பெண், அழகுக்கலை நிபுணராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் வெங்கடேஷ் எலியாஸ் சந்து என்ற இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இதனையடுத்து, கடந்த ஓராண்டாக இருவரும் பிரசாந்த் நகரில் ஒரே வீட்டில் வசித்து Live-in relationship முறையில் வந்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிரண்மயியின் செல்போன் ரீசார்ஜ் முடிவடைந்துள்ளது. தனக்கு இன்னும் சம்பளம் வராததால், காதலன் சந்துவிடம் ரீசார்ஜ் செய்யுமாறு அவர் கேட்டுள்ளார். ஆனால், வேலையில் மும்முரமாக இருந்த சந்து அதனைச் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்திற்குப் பிறகு சந்து வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், மனமுடைந்த கிரண்மயி மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வீடு திரும்பிய சந்து, கிரண்மயி பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் அலறியுள்ளார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், தனது மகளின் மரணத்தில் காதலன் சந்து மீது சந்தேகம் இருப்பதாக கிரண்மயியின் தாயார் காவல்துறையில் புகாரளித்துள்ளார். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கிரண்மயிக்கு கடந்த 2015-ம் ஆண்டே திருமணமாகி ஒரு மகன் இருப்பதும், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து சந்துவுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. தற்போது போலீசார் இச்சம்பவத்தை தற்கொலை வழக்காகப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய ரீசார்ஜ் விவகாரம் தற்கொலை வரை சென்றிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
