மும்பையில் பிரியாணி சாப்பிட்ட பின்  நள்ளிரவில் தர்பூசணி பழம் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளிவந்துள்ள நிலையில் அவர்கள் உடம்பில் விஷம் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் தர்பூசணியால் மரணம் நிகழவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மராத்தி நடிகர் ஷஷாந்த் கேட்கர் மற்றும் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அவர்கள் வாங்கிய தர்பூசணி பழத்தில் இருந்து சோப்பு நுரை போல வெளியேறுவதைக் கண்டு மக்கள் பீதியடைந்துள்ளனர். சர்க்கரைச் சத்துக்காக ஊசி மூலம் ரசாயனங்கள் செலுத்தப்படுவதே இதற்குக் காரணம் என வதந்திகள் பரவி வருகின்றன.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகையில், “தர்பூசணியில் நுரை வருவது எப்போதும் ரசாயன ஊசியால் நடப்பது அல்ல. தர்பூசணிக்குள் இருக்கும் இயற்கை சர்க்கரை, பாக்டீரியாக்களுடன் வினைபுரிந்து ‘புளித்தல்’ (Fermentation) நடைபெறும்போது கார்பன்-டை-ஆக்சைடு வாயு உருவாகிறது. கோடை வெப்பம் அதிகமாக இருக்கும்போது இந்தச் செயல்முறை வேகமாக நடக்கும். அப்போதுதான் பழத்தை வெட்டும்போது நுரை அல்லது குமிழ்கள் வெளியேறும். இது பழம் அழுகிப்போனதற்கான அறிகுறி,” என்று விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் பழத்தின் அடிப்பகுதியில் அடர் மஞ்சள் நிறத்தில் திட்டு இருந்தால் அது நன்கு பழுத்த பழம். வெள்ளை அல்லது லேசான மஞ்சள் நிறம் இருந்தால் அது காயாக இருக்கலாம். பழத்தைத் தட்டிப் பார்க்கும்போது ‘டம் டம்’ என கனமான சத்தம் வந்தால் அது இனிப்பான பழம். மெல்லிய சத்தம் வந்தால் அது காய்ந்து போயிருக்கலாம். தர்பூசணியை வெட்டும்போது புளித்த வாடையோ அல்லது துர்நாற்றமோ வீசினால் தயங்காமல் குப்பையில் எறியுங்கள்.