மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் நஸ்ராபூர் கிராமத்தில், 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தையே உறைய வைத்துள்ளது. கோடை விடுமுறைக்காக தனது பாட்டி வீட்டுக்கு வந்திருந்த அந்தச் சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த பீம்ராவ் காம்ப்ளே (65) என்ற முதியவர் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.

அதாவது கடந்த  வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 3:12 மணியளவில், “கன்றுக்குட்டி காட்டுகிறேன் வா” என்று ஆசை வார்த்தை கூறி அந்தச் சிறுமியை ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபர், தனது அடையாளம் தெரிந்துவிடும் என்ற பயத்தில் சிறுமியின் தலையில் கல்லைப்போட்டு நசுக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர், குற்றத்தை மறைப்பதற்காகச் சிறுமியின் உடலை அங்கிருந்த சாணக் குவியலுக்கு அடியில் புதைத்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

விளையாடச் சென்ற சிறுமி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் தேடியபோது, மாட்டுத் தொழுவத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, முதியவர் பீம்ராவ் காம்ப்ளே சிறுமியை அழைத்துச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனை வைத்து போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்தனர்.

இது குறித்து புனே எஸ்பி சந்தீப் சிங் கில் கூறுகையில், “கைது செய்யப்பட்ட பீம்ராவ் காம்ப்ளே மீது ஏற்கனவே 1998 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், அவற்றில் இருந்து அவர் விடுதலையாகியுள்ளார். தற்போது இந்த வழக்கில் 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விரைவு நீதிமன்றம் மூலம் அவருக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதி அளித்தார். மேலும் பிஞ்சுச் சிறுமிக்கு நேர்ந்த இந்தத் துயரம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.