தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மேல ஓட்டங்காடு பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த100 நாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளி ஒருவர், பலாப்பழங்கள் தலையில் விழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சின்னப்பொண்ணு (35) என்ற அந்தப் பெண் தொழிலாளி, கடந்த 22-ஆம் தேதி வழக்கம் போல் 100 நாள் வேலைக்குச் சென்றுள்ளார். மதிய உணவு இடைவேளையின் போது, வெயிலின் தாக்கத்தைத் தணிக்க அங்கிருந்த ஒரு பலா மரத்தின் நிழலில் அவர் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, மரத்தில் இருந்த மூன்று பெரிய பலாப்பழங்கள் எதிர்பாராதவிதமாக, நேரடியாக அவரது தலையில் விழுந்தன. இதில் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த சின்னப்பொண்ணுவை, அருகில் இருந்த சக தொழிலாளர்கள் மீட்டு உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.