கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் அரங்கேறிய பயங்கர வெடி விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளதுடன், இரண்டு உயிர்களையும் பலி வாங்கியுள்ளது.
புளியங்குளத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி ரகசியமாக நடந்து வந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மருந்து உராய்ந்து பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தின் கோரத்தாண்டவத்தால் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கட்டிடம் கண் இமைக்கும் நேரத்தில் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது.
இந்த இடிபாடுகளில் சிக்கி புளியங்குளத்தைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் புல்ல கவுண்டன்பட்டியைச் சேர்ந்த மாலதி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த பயங்கர விபத்தில் படுகாயமடைந்த சூரிய பிரகாஷ் என்ற இளைஞர் மீட்கப்பட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.
சட்ட விரோத பட்டாசு தயாரிப்பால் ஒரே நாளில் இரண்டு மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
