தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவினால் இறந்துவிட்டார். அதன்பின் சிறுமியின் தாயார் கூலி வேலை செய்து தன்மகளை காப்பாற்றி வந்த நிலையில் தந்தையின் இழப்பால் குடும்பம் வறுமையில் வாடியது. அவர்களுக்கு உறவினர்கள் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இதனால் மன வேதனையில் சிறுமியின் தாய் நேற்று முன்தினம் காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த சிறுமி செய்வதறியாது தாயின் சடலம் அருகே உட்கார்ந்திருந்திருந்த  நிலையில் அடக்கம் செய்வதற்கு கூட பணம் இல்லை.

இதனால் அந்த கிராம மக்களிடம் தன் தாயின் இறுதி சடங்குக்கு உதவி செய்யுமாறு சிறுமி கேட்டார். பின்னர் ஒரு இடத்தில் வேறு வழியில்லாமல் துண்டை விரித்து உட்கார்ந்து பிச்சை எடுக்க தொடங்கி விட்டார். இதனைப் பார்த்து வேதனை அடைந்த அந்த  பகுதியை சேர்ந்த சிலர் தங்களால் முடிந்த அளவுக்கு பணம் கொடுத்தனர். இதனை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் பாரதி ராஷ்டிரிய கட்சியின் முன்னாள் அமைச்சர் கேடி ராமராவ் சிறுமிக்கு உதவி செய்வதாக அறிவித்துடன், சம்பவ இடத்திற்கு சிலரை அனுப்பிவைத்து இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்தார். இதைத் தொடர்ந்து சிறுமியின் தாயாருக்கு இறுதி சடங்கு நடந்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.