ஹைதராபாத்தில் மாம்பழம் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள், தங்களது வீட்டில் ஆசையாக மாம்பழம் சாப்பிட்டுள்ளனர். மாம்பழம் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே இருவருக்கும் கடுமையான வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர், குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அந்த இரண்டு சிறுமிகளும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் மாம்பழம் சாப்பிட்ட பின் உயிரிழந்ததால், இந்த மரணத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன என்பது குறித்துப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை அவர்கள் சாப்பிட்டதால் கடுமையான உணவு நச்சு  ஏற்பட்டு இந்த விபரீதம் நிகழ்ந்ததா, அல்லது மாம்பழத்தில் ஏதேனும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் இருந்ததா என்ற கோணத்தில் காவல்துறையினரும், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்த சிறுமிகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் முழு அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரியவரும் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.