உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள முத்ரா கிராமத்தில் நிலவி வரும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை காரணமாக, அங்குள்ள இளைஞர்களுக்குத் திருமணம் நடப்பதில் பெரும் சமூகச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இக்கிராமத்தில் சுமார் 2,000 மக்கள் வசித்து வரும் சூழலில், ‘நமாமி கங்கா’ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களும், தண்ணீர் தொட்டியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தப் பயனும் இன்றி முடங்கிக் கிடக்கின்றன. இதனால் கிராம மக்கள் தங்களின் அன்றாடத் தேவைக்கு ஒரு சில கை பம்புகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.
இந்த அவல நிலையைச் சுட்டிக்காட்டும் அண்டை கிராமத்து மக்கள், “தங்கள் வீட்டுப் பெண்கள் இங்கு வந்தால் தினமும் மைல் கணக்கில் நடந்து தண்ணீர் சுமக்க வேண்டியிருக்கும்” எனக் கூறி, முத்ரா கிராமத்து இளைஞர்களுக்குப் பெண் கொடுக்க மறுத்து வருகின்றனர். இதன் காரணமாக, திருமண வயதை எட்டியும் சுமார் 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கியூவில் நின்றபடி தங்களது இளமைக் காலத்தைக் கடத்தி வருகின்றனர்.இக்கிராமத்தில் உள்ள மூன்று கை பம்புகளில் இரண்டில் உப்பு நீர் மட்டுமே வருவதால், எஞ்சியிருக்கும் ஒரே ஒரு கை பம்பில் தண்ணீர் பிடிக்க பெண்கள், முதியவர்கள் என அனைவரும் அதிகாலை முதலே மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.
விசேஷ நாட்களின் போது சொந்தப் பணத்தைச் செலவழித்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வாங்குவது ஏழை மக்களுக்குக் கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துகிறது. அரசு ஆவணங்களில் இக்கிராமம் அனைத்து வசதிகளையும் பெற்றதாகக் காட்டப்பட்டாலும், நிஜத்தில் தங்களுக்குக் குடிக்க ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் கிடைக்கவில்லை என்று கிராம மக்கள் கண்ணீருடன் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, வெற்றி பெற்ற பின் எட்டிப் பார்க்காத அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே தங்களது இந்த அவல நிலைக்குக் காரணம் என்று சாடும் அப்பகுதி மக்கள், அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தங்களது கிராமத்தின் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
