தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு கொடூர சம்பவத்தில், பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்ட சிறுமியை, கார் ஓட்டுநர் ஒருவர் கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மாடியில் இருந்து கீழே விழுந்ததில் சிறுமிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியைத் தனியாகப் பின்தொடர்ந்து சென்று இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். மாடியில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, சிறுமி தைரியமாக சத்தம் போட்டுள்ளார்; இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், தனது குற்றம் வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்தில் சிறுமியை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுத் தப்பியோடியுள்ளார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட ஓட்டுநர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு உரிய தண்டைனை பெற்றுத்தர தீவிர விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.