விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பாரதியாரின் வீரமிக்க வரிகளை மேற்கோள் காட்டி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை அவர் வலுவாக முன்வைத்து வருகிறார்.

இது தொடர்பாக அண்மையில் அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், கட்சி மேலிடத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில், “தேடிச்சோறு நிதம் தின்று… பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!” என்ற பாரதியின் வரிகளைப் பதிவிட்டு, தனது அரசியல் நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் மாணிக்கம் தாகூரின் இந்த அதிரடிப் பதிவு, அவர் எதற்கும் அஞ்சப்போவதில்லை என்பதையும், விமர்சனங்களுக்கு வளைந்து கொடுக்கப் போவதில்லை என்பதையும் மறைமுகமாக உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மேலும் “அச்சமில்லை அச்சமில்லை” என்று ஏற்கனவே பதிவிட்டிருந்த அவர், தற்போது மீண்டும் பாரதியின் வரிகள் மூலம் தனது மன உறுதியை பறைசாற்றியுள்ளார். திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்பியின் இத்தகைய பதிவுகள் கூட்டணிக்குள்ளும், தமிழக அரசியலிலும் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.