மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரின் முக்த சைனிக் பகுதியில், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஆசிஷ் ஜெயக்குமார் பாட்டீல் (24) என்ற இளைஞர் சொகுசு பங்களா ஒன்றில் புகுந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளைத் திருடியுள்ளார். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ள இவரது தந்தை அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர், சகோதரியும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இப்படிப்பட்ட குடும்பப் பின்னணி கொண்ட ஆசிஷ், மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால் இந்தத் துணிகரத் திருட்டில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமன்றி, திருடிவிட்டுச் செல்லும்போது படுக்கையின் மீது எரியும் சிகரெட்டை வீசிவிட்டுச் சென்றதால் அந்த பங்களா முழுவதும் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பங்களாவின் உரிமையாளரான சிவாஜி ஆகாராம் பாட்டீல் (65) மற்றும் திருடிய இளைஞரின் தந்தை ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இதனால், சிவாஜி பாட்டீல் ஊருக்குச் செல்லும்போது பங்களாவின் சாவி எங்கு வைக்கப்படும் என்பது ஆசிஷிற்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. சம்பவத்தன்று வாசலில் இருந்த காலணிக்குள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து பங்களாவைத் திறந்து, பீரோவில் இருந்த 6 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைத் திருடியுள்ளார். பின்னர் சாவியை மீண்டும் அதே இடத்தில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஷாஹுபுரி போலீஸார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆசிஷைக் கைது செய்து அவரிடமிருந்து நகைகளையும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.