ஹைதராபாத்தின் கோல்கொண்டா பகுதியில் 30 வயதுடைய பிரபல யூடியூபரான ஷேக் மஹபூப் (என்கிற சண்டி மசூத்) என்பவர், அவரது சொந்த வீட்டிற்குள்ளேயே மர்ம நபர்களால் கொடூரமான முறையில் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கோல்கொண்டா போலீசார், முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாகவே இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் பலமாக சந்தேகிக்கின்றனர். குறிப்பாக, உயிரிழந்த மஹபூபின் மாமனார் குடும்பத்தினருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் மஹபூபின் மைத்துனர் (மனைவியின் சகோதரர்) தான் முதன்மை குற்றவாளி என போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படும் நிலையில், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
