​”திமுக – அதிமுக கூட்டணி என்பது வெறும் வதந்தி தான்; அதேபோல் விசிக மீதான எங்களது கோபம் என்பது ஒரு தற்காலிகமான சகோதர முரண்பாடு தான்” என்று திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா அதிரடியாகத் தெளிவுபடுத்தியுள்ளார். சமீபகாலமாக அரசியல் வட்டாரத்தில் பரவி வரும் பல்வேறு கூட்டணி வதந்திகளுக்கும், திமுக-விசிக இடையே ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் விரிசல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் ஓப்பனாகப் பேசியுள்ளார்.

​செய்தியாளர்கள் சந்திப்பில் தொடர்ந்து பேசிய அவர், “திமுக-அதிமுக கூட்டணி பற்றி கட்சியின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் விவாதங்களில் பேசியிருக்கலாம். ஜனநாயகத்தில் பேசக் கூடாது என எதுவுமில்லை. ஆனால், எங்களது கட்சியின் தலைவரின் திடமான முடிவு என்ன? இதற்காக நாங்கள் செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டினோமா? கிடையாது.

விசிகவை நாங்கள் விமர்சித்தது குறித்துக் கேட்கிறார்கள், விசிக மீது நாங்கள் அதிக பாசம் வைத்திருந்தோம்; பாசம் இருப்பவர்கள் மீதுதான் கோபம் வரும். இது ஒரு தற்காலிகமான சகோதர முரண்பாடு தான், இது ஒன்றும் நிரந்தரமான விரிசல் இல்லை” என அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.