தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வு கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி தொடங்கி மாவட்ட அளவில் நடைபெற்றது. அதில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திங்கட்கிழமை திறக்கப்பட்டு வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற உள்ளது.

அதே சமயம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஜனவரி 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் என்னும் எழுத்தும் திட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. அந்த வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சிற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, அரசு பள்ளிகளில் ஓராசிரியராக உள்ள தலைமை ஆசிரியர்கள் தவறாமல் என்னும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.

அதேசமயம் பள்ளி மேலாண்மை குழு மூலமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி இல்லை. அதேபோல் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஜனவரி 2-ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும். இதனை தொடர்ந்து மூன்றாம் பருவத்திற்கு உரிய பாட நூல்கள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்தல், பள்ளி கல்வித்துறையால் பள்ளிக்கு வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தையும் எமிஸ்தளத்தில் பதிவு செய்தல், மூன்றாம் பருவத்திற்கு உரிய பாடத்திட்டங்கள் தயார் செய்தல் மற்றும் கற்றல் உபகரணங்கள் தயார் செய்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.