ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பிசினஸ் அனலிஸ்ட் ஒருவர், தனது மேலாளர் விடுப்பு விஷயத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து இணையத்தில் பகிர்ந்த கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
தனது உறவினர்களுடன் திடீரென ஒரு பயணம் செல்லத் திட்டமிட்ட அந்த ஊழியர், தனது மேலாளரிடம் இரண்டு நாட்கள் விடுப்பு கேட்டபோது அவர் உடனடியாக வாய்மொழியாக ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், விடுப்பு கோரும் விண்ணப்பத்தை ஆன்லைன் தளத்தில் பதிவேற்றியபோது, மேலாளர் அதை அங்கீகரிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.
மேலும், அந்த குறிப்பிட்ட வேலையை முடித்துத் தந்தால் மட்டுமே விடுப்புக்கு ஒப்புதல் தருவேன் என்று நிபந்தனை விதித்தது அந்த ஊழியரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பிறகு, கடைசி நேரத்தில் மேலாளர் இப்படி நிபந்தனை விதிப்பது நியாயமா என்று அந்த ஊழியர் குழப்பத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து ரெடிட் தளத்தில் அவர் பகிர்ந்த கருத்துக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலாளர்களிடம் விடுப்பு போன்ற விஷயங்களைப் பேசும்போது, அந்த உரையாடல்களைப் பதிவு செய்து வைப்பது அல்லது மின்னஞ்சல் வழியாக உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம் என்று பலரும் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முறையான விடுப்புக் கொள்கைகள் இல்லாததே இத்தகைய குழப்பங்களுக்குக் காரணம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். வேலையை முடித்துத் தராததால் விடுப்பு மறுக்கப்படுவது அல்லது சம்பளக் குறைப்பு செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அந்த ஊழியர் இருக்கும் நிலையில், நிறுவனம் மற்றும் மேலாளரின் செயல்பாட்டைப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
