ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்டில், 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது வீட்டில் மனித உடலின் எலும்புகள் மற்றும் பல்வேறு பாகங்களைச் சேகரித்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் வசித்து வந்த வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், மனித மண்டையோடுகள், கைகள், கால்கள் மற்றும் சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எலும்புகள் சிக்கியுள்ளன.

அதுமட்டுமின்றி, மனிதத் தோலால் செய்யப்பட்ட முகமூடி மற்றும் ஜாடி ஒன்றில் இதயம் போன்ற உறுப்பு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. உடற்கூறியல் மீதுள்ள ஆர்வத்தால் இவற்றைச் சேகரித்ததாக அந்த நபர் கூறினாலும், சில உடல் பாகங்களைச் சமைத்துச் சாப்பிட்டதாக அவர் அளித்த வாக்குமூலம் போலீசாரையே நிலைகுலைய வைத்துள்ளது.

இந்த விசித்திரமான நபர், மருத்துவமனைகளில் வேலை செய்தபோது சில பாகங்களைப் பெற்றிருக்கலாம் என்றும், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பழைய கல்லறைகளைத் தோண்டி இந்த எலும்புகளைத் திருடியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் மனித உடல் பாகங்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியுள்ள போலீசார், இந்த எலும்புகள் யாருடையவை மற்றும் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு மனிதன் இத்தகைய கொடூரமான செயல்களில் ஈடுபட முடிந்தது எப்படி என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.