பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு வாக்குறுதி குறித்து கடுமையாக விமர்சித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினை கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்ட பதிவில், “பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்களே, அதை செய்தீர்களா முதல்வரே?” என்று கேட்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆன பின்னரும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், மக்களுக்கு போலி நம்பிக்கைகளை அளித்து ஏமாற்றுவதில் திமுக தனித்து வெற்றி பெறும் என கடுமையாக சாடியுள்ளார்.

நயினார் மேலும் கூறுகையில், திமுகவின் 504-வது வாக்குறுதியான பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, வெறும் வாய் வாக்குறுதியாகவே உள்ளதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்காமல், விலைவாசி உயர்வால் மக்களை வதைப்பது தான் திமுகவின் ‘திராவிட மாடலா’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த லட்சணத்தில் ‘நாடு போற்றும் நான்காண்டு’ என வெற்று விளம்பரங்கள் செய்வதாகவும் விமர்சித்தார். திமுக அரசு இந்த வாக்குறுதியை நிறைவேற்றாது என்பது மக்களுக்கு தெளிவாகத் தெரியும் என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் இதற்கு பதிலடி கொடுப்பார்கள் என்றும், திமுகவின் ஆட்சிக் கனவு இனி பலிக்காது எனவும் கூறியுள்ளார்.