தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு இணை சான்றிதழை பெறுவதற்கு வருகிற 28-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிபாடங்களில் தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12 ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அரசு தேர்வுகள் இயக்க இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மொழி தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப படிவம் முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல்கள் போன்றவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி விண்ணப்பதாரர்கள் வருகிற 28-ஆம் தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பித்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.