புதுக்கோட்டை மாவட்டம் சங்கம் விடுதி பகுதியில் குறுவாண்டான் தெரு அமைந்துள்ளது. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் மேலே ஏறி பார்த்துள்ளனர். அப்போது குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதால் தான் துர்நாற்றம் வீசியதாக புகார்கள் எழுந்தது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி குடிநீர் மாதிரி மற்றும் அதிலிருந்த கழிவுகள் போன்றவற்றை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இந்நிலையில் பரிசோதனையின் முடிவில் குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என மாவட்ட ஆட்சியர் தற்போது தெரிவித்துள்ளார். அதாவது குடிநீர் தொட்டியை நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமல் வைத்ததால் அடியில் இருந்த குப்பைகளை தான் மாட்டுச்சாணம் என கருதியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது தான் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.