சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா வைரஸ் பரவலால் பல கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது. அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசி இந்தியாவிலும் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தியதால் மூளையில் தனக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதேபோன்று 51 வழக்குகள் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிலையில் அதன் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் போது அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனம் நீதிமன்றத்தில் அளித்த ஆவணத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியால் ஒரு அரிய வகை பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. அதாவது ரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு (டிடிஎஸ்) வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும் என்றும் இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்குப் பிறகு இளம் வயதினருக்கு அதிக மாரடைப்புகள் வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது தடுப்பூசியின் மூலம் பக்க விளைவுகள் ஏற்படும் என அந்நிறுவனம் அறிவித்தது பொதுமக்கள் மத்தியில் சற்று ‌ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.