உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கௌசாம்பி பகுதியில், காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள குடிசைப் பகுதிகளில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் அஜய் சர்மா என்பவர், ஒரு நபரின் முதுகில் தனது செல்போனை வைத்து அழுத்தி அது ஒரு இயந்திரம் என்றும், அதன் மூலம் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும் என்றும் கூறியுள்ளார்.

 

பீகார் மாநிலம் அரியாரியாவைச் சேர்ந்தவர் என்று அந்த நபர் திரும்பத் திரும்பக் கூறியும், இந்த இயந்திரம் நீங்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று காட்டுவதாகக் கூறி அந்த ஆய்வாளர் மிரட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினரின் இத்தகைய அறிவியல் ஆதாரமற்ற செயலுக்கும், அதிகார துஷ்பிரயோகத்திற்கும் எதிராகப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.