ஹைதராபாத்தில் உள்ள சுதா கார்ஸ் அருங்காட்சியகத்தின் புதுமையான கண்டுபிடிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 21 அடி நீளமுள்ள ஒரு பிரமாண்டமான கிரிக்கெட் மட்டை, எஞ்சின் பொருத்தப்பட்ட காராக மாற்றப்பட்டுள்ளது. இந்த வினோதமான யோசனையை அருங்காட்சியகத்தின் உரிமையாளர் கன்யாபொயினா சுதாகர் உண்மையாக்கியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by The Amazing Bharat (@theamazingbharatofficial)

இந்த மாபெரும் மட்டைக்கு ஃபார்முலா 1 கார்களைப் போலச் சிறிய ஓட்டுநர் அறை மற்றும் வட்ட வடிவச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பையை முன்னிட்டு, இந்தக் கிரிக்கெட் மட்டை வாகனமாக மாற்றப்பட்டதாகவும், இதில் பெட்ரோல் தொட்டி, இண்டிகேட்டர்கள், முகப்பு மற்றும் பின் விளக்குகள் ஆகியவை பொருத்தப்பட்டு, மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என்றும் அருங்காட்சியக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்காக ஒரு கிரிக்கெட் பந்து வடிவிலும் என்ஜின் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. டி.வி.எஸ். ஆக்டிவா ஸ்கூட்டியில் உள்ள எஞ்சின் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தக் கிரிக்கெட் பந்து கார், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன்களான கபில் தேவ் மற்றும் முகமது அசாருதீன் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது என்றும் அருங்காட்சியக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். விபத்துகளைத் தவிர்ப்பதற்காக இந்த இரண்டு வாகனங்களும் அருங்காட்சியக வளாகத்திற்குள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.