கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணார சந்தி தெருவில் பாத்திமா பீவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெய்லானி என்ற கணவர் உள்ளார். இந்நிலையில் பாத்திமா பீவி தனது கணவரின் நண்பரான அமீது என்பவருக்கு தனியார் நதி நிறுவனத்தின் மூலமாக எல்.இ.டி டிவி வாங்குவதற்காக கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஒரு சில மாதத்தில் அமீது ஊரை காலி செய்துவிட்டு வெளியூர் சென்று விட்டதாக தெரிகிறது.

இதனால் பாத்திமா தான் வாங்கி கொடுத்த கடனுக்காக மூன்று மாதங்கள் வட்டி செலுத்தியுள்ளார். அதன்பிறகு வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நிறுவனம் ஊழியர்கள் பாத்திமாவிடம் வட்டி கட்ட சொல்லி அடிக்கடி தொந்தரவு செய்துள்ளனர். மேலும் பாத்திமா வீட்டில் இருந்த டிவியை எடுத்து சென்றதாக தெரிகிறது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடையில் கொடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் பணத்தையும் வாங்கி சென்றனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பாத்திமா விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாத்திமா பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக நிதி நிறுவனங்கள் தன்னை கொடுமைப்படுத்தியது குறித்து பாத்திமா பேசிய வீடியோவும் கடிதமும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.