கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியதடாகம் வனப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் இரவு நேரங்கள் மக்கள் வெளியே வர வேண்டாம் என வனதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நேற்று காலை கணுவாய் மெயின் ரோட்டில் காட்டு யானை கம்பீரமாக நடந்து சென்றது. இதனை பார்த்ததும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சாலையில் அங்கும் இங்கும் உலா வந்தது.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையை வனப் பகுதிக்குள் விரட்டி அடித்தனர். முன்னதாக யானை தண்ணீர் குடிப்பது, சாலையில் உலா வருவது போன்றவற்றை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்கும் பொருட்டு வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.