கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வெள்ளிங்கிரி மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஏழு மலைகளை தாண்டி செல்ல வேண்டும். இங்கு வருடம் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அந்த வகையில் நேற்று புண்ணியகோடி (46) என்பவர் தன்னுடைய நண்பர்கள் 10 பேருடன் சென்றுள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர்கள் 1-வது மலையில் ஏறிய போது திடீரென புண்ணியகோடி வயிறு வலிக்கிறது என்று கூறினார்.

சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்துவிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இந்நிலையில் ஒரு மாதத்தில் மட்டும் மலையேறிய 9 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூச்சு திணறல் மற்றும் உடல்நல பிரச்சனைகள் இருப்பவர்கள் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.