சர்வதேச சுற்றுலா தளங்களுள் ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி. இங்கு வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக எண்ணிக்கையில் காணப்படும். இங்குள்ள  ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நூற்றாண்டு பழமை  வாய்ந்ததாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக ஊட்டி படகு இல்லம் அமைகிறது.

அதுமட்டுமல்லாது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் ஊட்டி ஏரியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப படகுகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த படகு இல்லத்தில் 17 துடுப்பு படகுகள், 104 மிதி படகுகள் மற்றும் 33 மோட்டார் படகுகள் உள்ளன.

மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முடிவெடுத்து வருகிறது.  அந்த வகையில் தற்போது, ஊட்டி படகு இல்லத்தில் புளோட்டிங் ஜெட்டி எனப்படும் செவ்வக வடிவிலான மிதவை பாலம் ஒன்று, புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.  இதற்கான செலவு   11 லட்சம் ரூபாய் மதிப்பீடாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிதவை பாலத்தில் நடந்து சென்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.