நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி கடைவீதி ரோஸ் காட்டேஜ் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடியின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணிக்கு கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் இருக்கும் ஒருவரது வீட்டு காம்பவுண்டுக்குள் கரடி நுழைந்தது. அந்த கரடி படிக்கட்டில் ஏறி உணவு ஏதாவது கிடைக்குமா என தேடி பார்த்துவிட்டு மீண்டும் அதே படிக்கட்டு வழியாக இறங்கும்போது சிறிது நேரம் விளையாடியது.

அதன் பிறகு குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி காட்டுக்குள் சென்றது. படிக்கட்டில் ஏறி இறங்கி கரடி விளையாடிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு கூண்டு வைத்து கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.