ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. மெகராஜ் மாலிக், பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தோடா பகுதியைச் சேர்ந்த இவர், மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஆவார். இவரது கைதை அடுத்து, தோடாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதனால் அரசு இணைய சேவைகளை துண்டித்து, செவ்வாய்க்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஆர்ப்பாட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒரு பெண், எம்.எல்.ஏ.வின் கைதுக்கு எதிராக பேஸ்புக் நேரலையில் கருத்து தெரிவித்தார்.
அப்போது அவரது கணவர், நேரலையை நிறுத்துமாறு கோரியபோது, அவர் தொடர்ந்து பேசி, அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பேன் என்று உறுதியாகக் கூறினார். இதனால் கோபமடைந்த கணவர், கெட்ட வார்த்தைகளால் திட்டி, மனைவியை கடுமையாக தாக்கினார்.
இந்த தாக்குதல் நேரலையில் பதிவாகி, சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக பெண்ணையும், நேரலையில் மனைவியை தாக்கியதற்காக கணவரையும் காவல்துறை கைது செய்தது. இந்த சம்பவம் பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
