ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஜெகத்புரா பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற அரசு பொறியாளர் திலீப் குமாரின் மனைவி ஊர்மிளா கவூர் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கித் என்ற மகன் உள்ள இந்த தம்பதியினர் ஜெகத்புராவில் உள்ள ஒரு குடியிருப்பின் எட்டாவது மாடியில் வசித்து வந்தனர். ஓய்வுபெற்ற பொறியாளரான திலீப் குமார் தனது பணிக்காலத்தில் லஞ்சம் பெற்றதாகவும் மற்றும் ஊழலில் ஈடுபட்டதாகவும் ராஜஸ்தான் மாநில லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த இக்கட்டான சூழலில் இன்று காலை ஊர்மிளா கவூர் தனது வீட்டின் பால்கனி பகுதியில் நின்றிருந்தபோது எதிர்பாராத விதமாகத் தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. எட்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த ஊர்மிளா படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட அங்கிருந்த குடியிருப்புவாசிகள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தனது கணவர் ஊழல் வழக்கில் கைதான மன உளைச்சலில் ஊர்மிளா இருந்தாரா அல்லது இது தற்செயலாக நடந்த விபத்தா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் இது தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து பல்வேறு தரப்பினரிடமும் வாக்குமூலங்களைச் சேகரித்து வருகின்றனர்.
