டெல்லியில் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அம்மாநில முதல்வர் ரேகா குப்தா ‘டெல்லி லட்சாதிபதி மகள்’ (Delhi Lakhpati Bitiya Yojana) என்ற புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் அதன் பட்டப்படிப்பு வரை பல்வேறு கட்டங்களாக மொத்தம் ₹56,000 அந்தப் குழந்தையின் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இத்தொகை வட்டியுடன் சேர்ந்து அந்தப் பெண் தனது படிப்பை முடிக்கும்போது, கையில் ₹1 லட்சத்திற்கும் அதிகமான முதிர்வுத் தொகை கிடைப்பதை அரசு உறுதி செய்கிறது.
பழைய ‘லாட்லி’ திட்டத்திற்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டம், நிதிப் பற்றாக்குறையினால் பெண் குழந்தைகள் படிப்பைப் பாதியில் நிறுத்துவதைத் தடுக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் ₹1.20 லட்சத்திற்கும் குறைவாக உள்ள, டெல்லியில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும் என முதல்வர் ரேகா குப்தா விளக்கமளித்துள்ளார்.
