மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளதும், அமெரிக்க மற்றும் பிரிட்டன் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலராக அதிகரித்துள்ள நிலையில், இது இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்திற்கு வழிவகுக்குமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும், சர்வதேச சந்தையில் விலை அதிகரித்தாலும் தற்போதைக்கு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும் நாடு முழுவதும் எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், விலை ஏற்றம் கட்டுக்கடங்காமல் போனால் மட்டுமே விலையை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தற்போதைய நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு இருக்காது என்பது வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
