மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யின் அரசியல் விமர்சனங்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்தார். “விஜய் தன்னை தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த அவதார புருஷனாக நினைத்துக் கொள்கிறார், ஆனால் மக்கள் அதை ஏற்கமாட்டார்கள். அதிமுகவைப் பற்றிய விஜய்யின் விமர்சனங்கள் தொண்டர்களால் ஏற்கப்படாது.
எந்த தொண்டரிடம் பேசி, அதிமுக தொண்டர்கள் மனவேதனையில் உள்ளனர் என்று அவருக்கு தெரிய வந்தது? யாரோ ஒருவரின் தூண்டுதலால் இவர் இப்படி பேசியிருக்கலாம்,” என்று உதயகுமார் கூறினார். மேலும், அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் உறுதியாக உள்ளது என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஆர்.பி.உதயகுமார் மேலும் விமர்சித்தார். “அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் தவிர வேறு யாராலும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்பதால், விஜய் அவர்களைப் பற்றி பேசுகிறார். ஆனால், அவரது அரசியல் ஆசான் யார்? கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விஜய் அரசியலில் கைக்குழந்தையாகவே உள்ளார். கட்சி தொடங்கிய உடனே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைப்பது கனவு மட்டுமே,” என்று கூறினார்.
முதல் மாநாட்டில் திமுகவை ‘பாயாசம்’ என்றும், இந்த மாநாட்டில் ‘பாய்சன்’ என்றும் விஜய் பேசியதை சுட்டிக்காட்டிய உதயகுமார், “அடுத்த மாநாட்டில் ‘அமுது’ என்று பேசுவாரா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், செப்டம்பர் முதல் வாரத்தில் மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியே சரியானது என்று தேசிய கட்சிகளுக்கும் தெரியும் எனவும் தெரிவித்தார்.
