தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களமிறங்கவுள்ள தவெக, இந்த மாநாட்டின் மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை வலுவாக வெளிப்படுத்தியது. விஜய்யின் இந்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

விஜய்யின் பாஜக விமர்சனம் குறித்து, நெல்லையில் நடைபெறவுள்ள பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் பங்கேற்க தூத்துக்குடி விமான நிலையம் வந்த சரத்குமார், செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில், “நடிகர் விஜய் இன்னும் அரசியலில் ‘மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்’ என்று பேசக்கூடிய அளவுக்கு வளரவில்லை. எதைப் பேசுகிறோம், யாரைப் பற்றி பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம் என்பதை மிகவும் கவனத்துடன் பேச வேண்டும்,” என்று அறிவுரை வழங்கினார். விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சரத்குமாரின் இந்த கருத்து அமைந்துள்ளது.