மதுரையில் நடைபெற்ற சமூகநீதி மாணவர் இயக்கத்தின் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ப.அப்துல்சமது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைக் கடுமையாகச் சாடினார்.
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை விஜய் பகிரங்கமாகக் கண்டிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
“தனது கொள்கை எதிரிகளுக்கு எதிராகத் தைரியமாகப் பேசத் துணிவில்லாத விஜய், ஆட்சிக்கு வந்து மக்களை எப்படிக் காப்பாற்றுவார்?” என்று அவர் கேள்வி எழுப்பியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தச் சங்பரிவார் அமைப்புகள் விஜய்யைப் பயன்படுத்துவதாகவும், அதற்கு அவரும் துணை போவதாகவும் அப்துல்சமது பகிரங்கமாகப் புகார் தெரிவித்தார்.
விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பது முதல், உயர் அதிகாரிகள் பலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் சேருவது வரை அனைத்தின் பின்னணியிலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இருப்பதாக அவர் அதிரடியாகக் கூறினார்.
“பாசிசமா, பாயாசமா என நக்கல் பேசும் விஜய், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களில் மௌனம் காப்பது ஏன்?” என்று வினவிய அவர், விஜய்யின் உண்மை முகத்தை மக்களிடம் தோலுரித்துக் காட்டப் போவதாகவும் ஆவேசமாகத் தெரிவித்தார்.
