மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தனி விமானம் மூலம் சென்னை திரும்பிய நடிகர் விஜய்க்கு, சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்ததால், விஜய் தனது காரை நோக்கிச் செல்ல முடியாமல் கூட்ட நெரிசலில் சிக்கித் திணறினார்.

பாதுகாவலர்கள் அவரைச் சூழ்ந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றபோதும், கட்டுக்கடங்காத அன்பு மழையால் ரசிகர்கள் முண்டியடித்ததில் விஜய் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

கீழே விழுந்த விஜய்யை அவரது பாதுகாவலர்கள் உடனடியாகத் தாங்கிப் பிடித்து மீட்டு காரில் ஏற்றி அனுப்பினர். கீழே விழுந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ரசிகர்கள் காரைச் சூழ்ந்து கொண்டு ‘தளபதி தளபதி’ என முழக்கமிட்டதால் விமான நிலையமே அதிர்ந்தது.

எவ்வித காயமுமின்றி விஜய் அங்கிருந்து பத்திரமாகப் புறப்பட்டுச் சென்றாலும், ரசிகர்களின் அதீத உற்சாகத்தால் அவர் கீழே விழுந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2026 தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், விஜய்க்கு விமான நிலையத்தில் கிடைத்த இந்த மாபெரும் வரவேற்பு அவரது அரசியல் பலத்தைக் காட்டுவதாகத் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.