உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் 27 வயதான சிவானி என்ற திருமணமான பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை காலை வீட்டின் அறையில் படுக்கையில் சிவானி சடலமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது கணவர் யஷ் தாக்குர் அங்கிருந்து தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. சிவானியின் குடும்பத்தினர், அவரது கணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு முன்வைத்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையிடம் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத்தினர் கூறிய தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு சிவானிக்கும் அவரது கணவர் யஷ் தாக்குருக்கும் இடையே ஏதோ ஒரு காரணத்துக்காக தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததாகவும், யஷ் தாக்குர் சிவானியைத் தாக்கியதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதன் காரணமாக கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களாக சிவானி தனது தாய் வீட்டுத் தரப்பினருடன் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.30 மணி முதல் 2 மணியளவில் சிவானியின் தங்கை முஸ்கானிடம் தனது பையையும் பிற பொருள்களையும் யஷ் வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் அறையின் கதவை வெளிப்புறமாகத் தாழிட்டு அங்கிருந்து அவர் சென்றதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை சுமார் 5 மணியளவில் முஸ்கான் எழுந்து குளியலறைக்குச் செல்ல முயன்றபோது, அறையின் கதவு வெளிப்புறமாகத் தாழிடப்பட்டிருந்ததை கவனித்ததாகக் கூறப்படுகிறது. உள்ளே இருப்பவர்களை அழைத்தும் எந்தப் பதிலும் கிடைக்காததால் குடும்பத்தினர் சந்தேகமடைந்தனர். பின்னர் காலை சுமார் 9 மணியளவில் சிவானியின் சகோதரர் அனிகேத் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் அறையின் வெளிப்புறத் தாழ்ப்பாளைத் திறந்து பார்த்தபோது, சிவானி படுக்கையில் அசைவின்றிக் கிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை எழுப்ப முயன்றும் எந்தவிதமான பதிலும் கிடைக்காததால், குடும்பத்தினர் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிவானி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் சிவானிக்கும் யஷ் தாக்குருக்கும் அறிமுகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. முதலில் நட்பாகத் தொடங்கிய இவர்களது பழக்கம் பின்னர் காதலாக மாறியதையடுத்து இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது. திருமணமாகி சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகளும் தகராறுகளும் ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சிவானியின் மரணத்துக்குப் பிறகு அவரது கணவர் தலைமறைவான நிலையில், குடும்பத்தினர் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். எனினும், சிவானியின் மரணம் கொலையா அல்லது வேறு காரணத்தால் ஏற்பட்டதா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் காவல் துறையின் முழுமையான விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.