தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது, தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக திமுக மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்ததை திமுக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர்.

“15 லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னீர்களே.. யாருக்காவது கொடுத்தீர்களா?” என்று திமுக எம்.எல்.ஏக்கள் கிண்டலாகக் கேட்க, இதனால் ஆத்திரமடைந்த பாஜக உறுப்பினர்கள் எழுந்து நின்று பதிலுக்கு திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் என்னவானது? என்று பாஜகவினர் எகிற, சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், “நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் நிறைவேற்றிவிட்டோம்;

ஆனால் உங்கள் 15 லட்சம் ரூபாய் கதை என்ன ஆனது?” எனப் பதிலடி கொடுக்க, விவாதம் இன்னும் சூடுபிடித்தது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி முழக்கமிட்டதால், சட்டசபையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த ’15 லட்சம்’ பஞ்சாயத்து இப்போது சோஷியல் மீடியாவிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.