மின்சார விதிகளுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, தமிழக அரசின் இலவசக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடியுள்ளது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்திடம் கேள்விகளை அடுக்கிய நீதிபதிகள், “வசதி படைத்தவர்களுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் ஏன் பாகுபாடு காட்டாமல் இலவசங்களை வழங்குகிறீர்கள்?” என்று வினவினர். இது பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் ‘திருப்திப்படுத்தும் அரசியல்’ (Appeasement Politics) ஆகாதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

​மேலும், மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையில் இருக்கும்போதும் ஏன் தேர்தல் நேரங்களில் மட்டும் இத்தகைய அறிவிப்புகள் வெளியாகின்றன என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். “மக்களுக்கு இலவச உணவு, மின்சாரம் மற்றும் நேரடியாகப் பணத்தைக் கொடுத்தால் அவர்கள் ஏன் வேலை செய்யப் போகிறார்கள்? இது தேசத்தைக் கட்டமைக்கும் முறையா?” என்று கேட்ட நீதிபதிகள், இந்தத் தொகையைச் சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்களை மேம்படுத்தப் பயன்படுத்தலாமே என்று அறிவுறுத்தினர். இலவசங்களை ஒழித்து மக்களைச் சுயமரியாதையுடன் வாழ வைக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று கூறி, இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.