ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த ஒரு பழைய இரும்பு வியாபாரி, சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 கிராம் தங்க நகைகளை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து தனது நேர்மையை நிரூபித்துள்ளார். அசோக் சர்மா என்பவர் தனது குடும்பத்துடன் கும்பமேளாவிற்குச் சென்றபோது, திருட்டு பயத்தினால் வீட்டில் இருந்த தங்க நகைகளை ஒரு பழைய டப்பாவில் அடைத்து, யாருக்கும் சந்தேகம் வராதபடி பழைய பொருட்கள் இருந்த மூட்டைக்குள் மறைத்து வைத்துள்ளார்.

ஆனால், தீபாவளி நேர சுத்தப்பணியின் போது, அவரது குடும்பத்தினர் கவனக்குறைவாக அந்த மூட்டையை என்ற பழைய இரும்பு வியாபாரியிடம் விற்றுவிட்டனர். பூஜையின் போது நகைகளைத் தேடிய குடும்பத்தினர், அவை தவறுதலாக விற்கப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால், நான்கு மாதங்களுக்குப் பிறகு அந்த வியாபாரி தனது கிடங்கில் இருந்த குப்பைகளுக்கு இடையே அந்த நகைப் பெட்டியைக் கண்டெடுத்தார். உடனடியாக காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில், அந்த நகைகளை அசோக் சர்மாவின் குடும்பத்தினரிடம் அவர் பத்திரமாக ஒப்படைத்தார்.

இந்நிலையில் இக்காலகட்டத்தில் இவ்வளவு பெரிய மதிப்பிலான சொத்தைத் திருப்பித் தந்த அந்த வியாபாரியின் உயர்ந்த குணத்தையும் நேர்மையையும் அப்பகுதி மக்களும் காவல்துறையினரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.