மதுரை கள்ளழகர் திருக்கோவிலின் உபரி நிதியான நாற்பது கோடி ரூபாயில் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளதை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், கோவிலின் நிதி நூற்று ஏழு கோடி ரூபாயிலிருந்து அறுபத்திரண்டு கோடி ரூபாயாகக் குறைந்துள்ளதை நீதிமன்றம் தெய்வக்குற்றம் என்று சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் கோவிலைத் தனிப்பட்ட சொத்தாகக் கருத முடியாது என்று கூறி திமுக அரசுக்கு நீதிமன்றம் சரியான சவுக்கடி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அறங்காவலர் குழுக்கள் இல்லாமல் கோவில்களை நிர்வகிப்பதோடு, கமிஷன் பெறும் நோக்கில் கோவில் நிதியில் வணிக வளாகம் கட்ட முயற்சிக்கும் அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ஆட்சி முடியும் தருவாயிலாவது திமுக அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளுமா என்பது கேள்விக்குறியே என்று கூறியுள்ள அவர், கோவில் சொத்து கோவிலுக்கே என்பதை உணராமல் உண்டியல் தொகையில் லாபம் பார்க்க நினைக்கும் பேராசையாலேயே இந்த அரசு அழியும் என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளார். கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பதில் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய மைல்கல் என்று அவர் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.
