மகாராஷ்டிர மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், துணை முதல்வர் அஜித் பவார் (66) இன்று காலை நேரிட்ட கோர விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இந்த விபத்தில் மர்மம் இருப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இன்று காலை துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவரது குழுவினர் சிறிய ரக விமானம் ஒன்றில் பயணம் மேற்கொண்டனர். விமானம் இலக்கை அடைந்து தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாகத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜித் பவார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த பாதுகாப்பு அதிகாரிகள் 3 பேர் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 6 பேர் இந்த விபத்தில் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் பவாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த விபத்தின் பின்னணி குறித்து அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகச் சில நாட்களுக்கு முன்புதான் அஜித் பவார் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். இத்தகைய ஒரு முக்கியமான அரசியல் சூழலில் இந்த விபத்து நடந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
ஆளுங்கட்சியில் இருக்கும் ஒரு துணை முதல்வருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நீடித்தால், எதிர்க்கட்சியினரின் கதி என்ன? இந்த விபத்து குறித்து உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.” இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ள கருத்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அஜித் பவாரின் மறைவையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுமுறைத் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாராமதியின் சிங்கம் என அழைக்கப்படும் அஜித் பவாரின் திடீர் மறைவு, மகாராஷ்டிர அரசியலில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
