மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் இன்று காலை விபத்துக்குள்ளான செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனே அருகே உள்ள பாராமதி பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்த நிலையில், இதில் பயணம் செய்த அஜித் பவார் உள்ளிட்ட ஐந்து பேரும் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவத்தில் பலியானவர்களில் மும்பையைச் சேர்ந்த விமான பணிப்பெண் பிங்கி மாலியும் ஒருவர். அவரது மறைவு குறித்த செய்தி அறிந்த அவரது தந்தை சிவகுமார் மாலி, தனது மகளின் கடைசி வார்த்தைகளை எண்ணி கண்ணீர் மல்க கதறி அழுதது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
தனது மகளின் மரணம் குறித்து பேசிய சிவகுமார் மாலி, அஜித் பவார் சாருடன் இன்று நான் பறக்கப் போகிறேன் என மகிழ்ச்சியுடன் கூறிவிட்டுச் சென்ற மகள், தற்போது பிணமாகத் திரும்புவாள் என தான் கனவிலும் நினைக்கவில்லை என்று உருக்கமுடன் தெரிவித்தார். ஹோட்டலுக்குச் சென்றவுடன் மீண்டும் அழைப்பதாகக் கூறிவிட்டுச் சென்ற மகளின் குரல் இனி எப்போதும் கேட்காது என அவர் வேதனையுடன் கூறினார்.
மொழி தெரியாதவர்கள் கூட அவரது முகத்தில் தெரிந்த அந்த ஆழ்ந்த துயரத்தைக் கண்டு கண் கலங்கினர். அஜித் பவாரின் தீவிரத் தொண்டராக இருந்த சிவகுமார் மாலிக்கு, தனது மகளும் அதே தலைவருடன் விபத்தில் சிக்கி உயிரிழந்தது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது.
