ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசேர் மாவட்டத்தில் அடுத்தடுத்த ரயில்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நேற்று நடைபெற்ற நிலையில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே உயர்மட்ட குழு விரிவான விசாரணை நடத்தும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது தற்போது முதல் கட்ட விசாரணையில் வெளிவந்துள்ளது. அதாவது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் லைன் மாறி சென்றதுதான் விபத்துக்கான காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது பஹனாகா பஜார் ரயில்வே நிலையம் அருகே 4 தண்டவாளங்கள் இருக்கிறது. இதில் ஒரு லூப் லைன் இருக்கிறது. இந்த லூப்லைன் மற்ற ரயில்கள் எளிதாக செல்வதற்கு வழிவிடும் வகையில் அமைக்கப்படுகிறது. இந்த லூப் லைனில் சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது.

இந்நிலையில் மெயின் லைனில் வரவேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென லூப் லைன் வழியாக சென்றதால் சரக்கு ரயில் மீது மோதியது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் 128 கிலோமீட்டர் வேகத்தில் எதிர்பாராத விதமாக சரக்கு ரயில் மீது மோதியதில் பெட்டிகள் தடம் புரண்டது. இந்த ரயிலின் பெட்டிகள் மற்ற தண்டவாளத்தில் சரிந்து விழுந்த நிலையில் 116 கிலோமீட்டர் வேகத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. இதனால் பெரும் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே துறை சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.