சென்னையில் காவலாளியாகப் பணியாற்றி வந்த பீகாரைச் சேர்ந்த கௌரவ் குமார், அவரது மனைவி மற்றும் 2 வயதுக் குழந்தை என ஒரு குடும்பமே கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. இந்தச் சோகமான சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தனது கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.

“தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு, வெளிமாநிலத்தவருக்குப் பாதுகாப்பு என வாய்ச்சவடால் பேசும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், இந்தக் குடும்பக் கொலைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுளார்.

திமுக அரசு தன்னை ஒரு பாதுகாப்பு கேடயமாகத் தம்பட்டம் அடித்துக்கொள்வதாகவும், ஆனால் நடைமுறையில் குற்றவாளிகளின் புகலிடமாகத் தமிழகம் மாறி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

 சென்னையிலேயே ஒரு குடும்பத்தைக் குழந்தையோடு சேர்த்து கருவறுக்கும் அளவுக்குக் குற்றவாளிகளுக்குத் துணிச்சல் வந்துவிட்டது என்றால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது? என அவர் வினவியுள்ளார்.