உத்தரப் பிரதேசத்தில் சங்கராச்சாரியாரைச் சுற்றியுள்ள கருத்து மோதல்கள் தற்போது அம்மாநில நிர்வாக வட்டாரங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. அயோத்தியில் ஜிஎஸ்டி துணை ஆணையராகப் பணியாற்றி வந்த பிரசாந்த் குமார் சிங், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்தியத் தலைவர்களுக்கு எதிராகக் கூறப்பட்ட அவதூறு கருத்துகளால் மனமுடைந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆளுநருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், மாநிலத்தின் உயரிய பதவியில் இருப்பவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசப்படுவதை ஒரு குடிமகனாகவும், அரசு ஊழியராகவும் தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றும், இது தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

48 வயதான பிரசாந்த் குமார் சிங், தனது ராஜினாமா குறித்துப் பேசுகையில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டுள்ளார். தனது குடும்பப் பொறுப்புகள் மற்றும் இரு பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் ஒருபுறம் இருந்தாலும், நாட்டின் தலைவர்களுக்கு இழைக்கப்படும் அவமானத்தை விடத் தனது வாழ்வாதாரம் பெரிதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டம் போராட்டங்களை அங்கீகரித்தாலும், பொது மேடைகளில் முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் கீழ்த்தரமான வார்த்தைகள் சமூகப் பிளவை ஏற்படுத்தும் என்றும், இத்தகைய சூழலில் பணியைத் தொடர விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், ராஜினாமா ஏற்கப்படும் வரை தனது கடமைகளை முழு அர்ப்பணிப்புடன் செய்யப்போவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
<a href="http://

“>
மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இரண்டு உயர்மட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. நேற்று முன்தினம் பரேலி நகர நீதிபதி அலங்கர் அக்னிஹோத்ரி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது ஜிஎஸ்டி துணை ஆணையரின் முடிவும் இணைந்துள்ளது. மௌ மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் குமார் சிங், கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அயோத்தியில் பணியாற்றி வருகிறார். அரசு ஊழியர்கள் பொதுவாக அரசியல் விவகாரங்களில் மௌனம் காக்கும் நிலையில், உணர்வு ரீதியாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளது அம்மாநிலத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.