சென்னை மாவட்டத்தில் உள்ள  ராயப்பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர், சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், ராயப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் அவர் நெருங்கிப் பழகி பாலியல் உறவில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் விளைவாக சிறுமி கர்ப்பமானதும் உறுதியானது.

விசாரணையைத் தொடர்ந்த காவல்துறையினர், குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் ஏற்கெனவே திருவல்லிக்கேணி பகுதியில் செல்போன் பறித்த வழக்கில் கைதாகி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அந்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். தற்போது கைது செய்யப்பட்ட சிறுவனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.