தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதிரடியான பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். “தமிழக அரசு மீது குறை சொல்வதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது” என்று திட்டவட்டமாகக் கூறிய அவர், மாநில அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் பேசி வரும் நிர்வாகிகள் மீது அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்குப் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்கத் தேசிய தலைமைக்குப் பரிந்துரை செய்திருப்பதாகக் கூறி கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியாளர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டணி குறித்துப் பேசிய அவர், “இந்தியா கூட்டணி ஒரு சமுத்திரம் போன்றது. அதில் சின்னச் சின்ன அலைகள் வரலாம், போகலாம்; ஆனால் யாராலும் இந்தக் கூட்டணியை உடைக்க முடியாது” எனத் தெம்பாகக் கூறினார்.

மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சாடிய அவர், “கூட்டணிக்கு யாராவது வருவார்களா என எடப்பாடி பழனிசாமி கதவைத் திறந்து வைத்துக்கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார். அவர் என்னதான் கதவைத் திறந்து வைத்திருந்தாலும், உள்ளே செல்ல யாருமே இல்லை” என நக்கலாகக் கமெண்ட் செய்துள்ளார்.