ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் இருபத்தியெட்டாம் தேதி நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால் மேற்காசியப் பகுதியில் போர்ச் சூழல் நிலவுகிறது.
இதனால் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது அந்தப் பாதையைக் கடந்து செல்லும் எதிரி நாடுகளின் கப்பல்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இந்நிலையில் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா விடுத்துள்ள அழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது மற்றும் பொறுப்புணர்வு வாய்ந்தது என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதலி இன்று தெரிவித்துள்ளார்.
ஈரானின் இறையாண்மையை மீறிப் பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் போன்ற பொது உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புத் தாக்குதல்களைச் சுதந்திரத்தை விரும்பும் அனைத்து நாடுகளும் பாகுபாடின்றி கண்டிக்க வேண்டும் என்று ஈரான் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ஒருபோதும் போரை விரும்பியதில்லை என்றும் தாங்களாக எந்த மோதலையும் தொடங்குவதில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் தங்களுக்கு எதிராகப் போர் திணிக்கப்பட்டால் அதன் முடிவு ஈரானின் கைகளிலேயே இருக்கும் என்றும் தற்போது நடைபெற்று வருவது அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சட்டபூர்வமான சுய பாதுகாப்பே என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
தற்போதைய இக்கட்டான சூழலில் அமைதியை நிலைநாட்ட இந்தியா போன்ற நாடுகளின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.
