உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கப்பர்பூர் கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயியான மனிஷ் (35), அவரது மனைவி சீமா மற்றும் 5, 4, 2 வயதான அவர்களின் மூன்று குழந்தைகள் ஒரே அறையில் பிணமாகக் கிடந்துள்ளனர். ஆரம்பத்தில் இது தற்கொலை என்று கருதப்பட்டாலும், போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனிஷ் முதலில் தனது மூன்று குழந்தைகளையும் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, பின்னர் மனைவியைத் தலையில் அடித்துக் கொன்றதாகத் தெரிகிறது. இறுதியில், மின்சார ஒயரைப் பிடித்து மின்சாரம் பாய்ந்த நிலையில் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலைக்கு முன்னதாக, “நாங்கள் எங்கள் விருப்பப்படி சாகிறோம்” என்று வீட்டின் சுவரில் மனிஷ் எழுதியுள்ளார். மேலும், தனது செல்போனில் 48 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், மனிஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு மந்திரவாதியுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர் கொடுத்த ‘அட்வைஸ்’ தான் இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்றும் போலீஸ் சந்தேகிக்கிறது.

சிரித்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு அழகான குடும்பம், மூடநம்பிக்கையாலும் மந்திர தந்திர ஆசையாலும் இப்படித் தடம் தெரியாமல் அழிந்து போனது கப்பர்பூர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.