2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது நடந்த புகழ்பெற்ற ‘அறை வழக்கு’ சம்பவம் குறித்த சர்ச்சை மீண்டும் பூதாகரமாகியுள்ளது. அந்தப் போட்டியில் ஹர்பஜன் சிங் தன்னை அறைந்த சம்பவத்தை நினைவுபடுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், சமீபத்தில் ஹர்பஜனை குத்துச்சண்டை வளையத்திற்கு வந்து மோத வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.
தற்போது ஒரு நேர்காணலில் பேசிய ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங்கை தான் தனது சமூக வலைதள பக்கங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் இருந்து வாழ்நாள் முழுவதும் நிரந்தரமாகத் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஹர்பஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மரியாதை இருந்தாலும், சில உறவுகள் தூரமாக இருப்பதே நல்லது என்று அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதே நேர்காணலில், 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் தான் வாங்கப்பட்ட தொகையைப் பற்றியும் ஸ்ரீசாந்த் மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது இந்திய மதிப்பில் சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கு (6.25 லட்சம் டாலர்) தான் ஏலத்தில் எடுக்கப்பட்டதை யாராலும் நம்ப முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
View this post on Instagram
“>
ஆஸ்திரேலியாவில் இந்தியா வெற்றி பெற்றுத் திரும்பிய அந்தச் சமயத்தில், ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டது பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு ஒருவித பொறாமையையும் ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தப் பழைய சம்பவங்கள் குறித்து ஸ்ரீசாந்த் வெளிப்படையாகப் பேசியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
